வியாழனின் மேகத்தில் என்ன உள்ளது?

நம் சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள் வியாழன். இதை, பழுப்பு நிற மேகங்கள் சூழ்ந்து இருக்கின்றன. இவை உறைந்த அமோனியாவால் ஆனவை என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று வியாழனில் 'அமோனியம் ஹைட்ரோ சல்பைட்' மேகங்களும் இருப்பதை உறுதி செய்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலை, பிரிட்டிஷ் விண்ணியல் ஆய்வு மையம் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து, வி.எல்.டி., எனப்படும் தொலைநோக்கியை கொண்டு வியாழனின் மேகங்களை ஆராய்ச்சி செய்தது. இதோடு மியூஸ் (MUSE) எனப்படும் ஒரு கருவியைச் சேர்த்துக் கொண்டனர். இது, ஒரு பொருளிலிருந்து வருகிற ஒளியை நிறமாலையாகப் பிரித்து அறிவதற்கு உதவுகிறது. ஒளியை வெவ்வேறு அலைநீளங்களாகப் பிரித்து ஆராய்வதன் வாயிலாக, அதில் உள்ள பல்வேறு மூலக்கூறுகளை கண்டறிய முடியும்.

இந்த ஆய்வு வாயிலாக, வியாழனின் வளிமண்டலமானது பல்வேறு அடுக்குகளை உடைய ஒரு கேக் போல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் மேல்மட்டத்தில் இருப்பவை அமோனியம் ஹைட்ரோ சல்பைடால் ஆன மேகங்கள். இவற்றுக்கு இடையே உறைந்த அமோனியத்தாலான மேகங்களும் இருக்கின்றன. இந்த மியூஸ் தொழில்நுட்பத்தை கொண்டு, சனி உள்ளிட்ட பிற கோள்களின் வளிமண்டலத்தை ஆராயலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Advertisement