சாக்கடைகளில் கோழிக்கழிவுகள் மக்கள் மறியலால் 5 கடைகளுக்கு சீல்
வேடசந்துார்: வேடசந்துார் மார்க்கெட் ரோட்டில் உள்ள கோழிக்கடை கழிவுகளை சாக்கடைகளில் கொட்டுவதை கண்டித்து பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
வேடசந்துார் மார்க்கெட் ரோடு வழியாகத்தான் நீதிமன்றம், தாலுகா ஆபீஸ், டி.எஸ்.பி., அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், பத்திரப்பதிவு உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். புதிதாக சாக்கடைகள் அமைக்கப்பட்டது. இங்கு அப்பகுதி கோழி, கறிக்கடை கழிவுகளை கொட்டி வந்தனர். இதனால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சுகாதாரக்கேடு ஏற்பட்டது.
பேரூராட்சி சார்பில் சாக்கடைகளை சுத்தப்படுத்துவது,கழிவுகள் கொட்டுவதை தடுப்பது போன்ற எந்த நடவடிக்கையும் இல்லாததால் வேடசந்துார் கூம்பூர் ரோட்டில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் மரிய அந்தோணி யூஜின் மேரி நடவடிக்கை எடுப்பதாக கூற மக்களை கலைந்தனர் . இதை தொடர்ந்து செயல் அலுவலர் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள 5 கோழிக்கறி கடைகளுக்கு சீல் வைத்தனர்.