அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கணும்! அரசுக்கு அழுத்தம் கொடுக்க தயாராகும் விவசாயிகள்

திருப்பூர்; அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில், விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல, விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

அடுத்தாண்டு சட்டசபை தேர்தலுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, அரசுக்கு அழுத்தம் கொடுப்பதென, அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப்பணி நிறைவு பெற்று, தற்போது, திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட, 1,045 குளம், குட்டைகளுக்கு, நீர் செறிவூட்டும் பணி நடந்து வருகிறது.

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் வலியுறுத்த துவங்கியுள்ளனர்.

போராட்டக் குழுவினர் கூறியதாவது:

அத்திக்கடவு திட்டத்தில், 1,045 குளம், குட்டைகள் தேர்வு செய்யப்பட்டு, நீர் செறிவூட்டும் பணி நடந்து வருகிறது.

இத்திட்டத்தில், 1,100 குளம், குட்டைகள் இணைக்கப்பட வேண்டியிருக்கிறது; இதுதொடர்பாக, 3 மாவட்டங்களிலும், அந்தந்த பகுதி விவசாயிகள் சார்பில், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு வழங்கியதன் அடிப்படையில், இணைக்கப்பட வேண்டிய குளம், குட்டைகள் குறித்த விவரங்களை நீர்வளத்துறையினர் பட்டியலிட்டு வைத்துள்ளனர். இதுகுறித்து, 'விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, கடந்த, 3 ஆண்டாக வலியுறுத்தி வருகிறோம்.

அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், அதற்குள்ளாக விடுபட்ட குளம், குட்டைகள் இணைக்கும் திட்டத்தை, அரசு துவக்க வேண்டும். தவறும்பட்சத்தில், தொடர் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதை தவிர வேறு வழியில்லை. இதுதொடர்பாக, விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டமும் நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement