மது பாட்டில் வீசும் இடமா கொடைக்கானல் ஏரி: 2 மாதத்தில் 6 டன் பாட்டில்கள் அகற்றம்
திண்டுக்கல்: கொடைக்கானல் நகராட்சி கடந்த இரண்டு மாதங்களில், கொடைக்கானல் ஏரியிலிருந்து 6 டன்களுக்கும் அதிகமான மது பாட்டில்களை அகற்றியுள்ளது.
கொடைக்கானல் ஏரி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1863ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றான இந்த ஏரியில், படகு சவாரி செய்ய அனைவரும் விரும்புகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், ஏரியில் கழிவுகள், பாட்டில்களை வீசி செல்கின்றனர். உள்ளூர் மக்கள், வியாபாரிகளும், கழிவுகளை கொட்டுகின்றனர்.
76 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை சுற்றிலும் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு சாலை அமைந்துள்ளது. கழிவுகளை கொட்டுவோருக்கு இந்த சாலை வசதியாக அமைந்து விட்டதாக பலரும் வேதனைப்படுகின்றனர். இப்படி கொட்டப்படும் கழிவுகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து ஆட்களை பயன்படுத்தி ஏரியில் இருக்கும் கழிவுகளை அகற்றும் பணி நகராட்சியால் தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் 6 டன்களுக்கும் அதிகமான மது பாட்டில்கள் அகற்றப்பட்டுள்ளன. 50 பேர் கொண்ட குழுவால் பாட்டில்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 3 மாதங்களில் அவர்கள் முழுமையாக பாட்டில்களை அகற்றி விடுவார்கள் என நகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர கழிவுகள் ஏரியில் மிதக்கின்றன. நீர்வாழ் தாவரம் படர்ந்துள்ளது. இது, பிற பாரம்பரிய தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கிறது. ஆக்சிஜன் அளவு குறைந்து, நீரின் தரத்தை கெடுக்கிறது
பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் ஏரியில் வீசப்படுகிறது. ஏரியை சுத்தம் செய்யவும் கழிவுகளை கொட்டுவார் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கொடைக்கானல் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'இது நகராட்சி எதிர்கொள்ளும் ஒரு கடுமையான பிரச்னை. மது பாட்டில்களை ஏரியில் சுற்றுலா பயணிகள் வீசி செல்கின்றனர். இதுவரை, கடந்த 2 மாதங்களில் 6 டன் மது பாட்டில்கள் ஏரியிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. ஏரியில் இன்னும் 5 முதல் 6 டன் பாட்டில்கள் இருக்க வாய்ப்புள்ளது' என்றார்.