கள்ளச்சாராயத்தால் 68 பேர் பலி; விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம் மற்றும் மாதவச்சேரி பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த, 68 பேர் உயிரிழந்தனர். 229 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதுகுறித்து வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்றப்பட்டது.
மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்றவர்கள், சப்ளை செய்தவர்கள் என, 24 பேரை கைது செய்தனர். இதில், குண்டர் தடுப்பு சட்டத்தில் 18 பேர் அடைக்கப்பட்டனர்.
கோர்ட் உத்தரவுப்படி
இந்நிலையில், குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு உள்ளிட்ட ஆவணங்கள், அவர்களுக்கு தெரிந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கவில்லை என கூறி, 18 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இதுவரை மூன்று பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து, 68 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ., க்கு மாற்றக்கோரி, அ.தி.மு.க., - பா.ம.க.,-தே.மு.தி.க.,- பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி கடந்தாண்டு நவ., 20ம் தேதி உத்தரவிட்டது. அதன்பின் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த டிச.,17ம் தேதி நடந்த இந்த மனு மீதான விசாரணையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் கள்ளச்சாராய வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், சி.பி.ஐ போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, சி.பி.ஐ., போலீசார் 10 பேர் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இடமான கண்ணக்குட்டி(எ) கோவிந்தராஜியின் வீட்டினை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, மாதவச்சேரி கிராமத்திற்கு சென்று கள்ளச்சாராயம் விற்பனை செய்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கள்ளச்சாராய வழக்கு விசாரணையை, சி.பி.ஐ., போலீசார் விசாரணையை துவக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.