கரம்கோர்த்த அமெரிக்கவாழ் இந்தியர்கள்; ஐதராபாத் மாணவரின் குடும்பத்திற்கு 83 லட்சம் ரூபாய் நிதி

10


ஐதராபாத்: அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு, அங்குள்ள இந்தியர்கள் 83 லட்சம் ரூபாய் திரட்டி கொடுத்துள்ளனர்.


தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாதைச் சேர்ந்தவர் ரவி தேஜா, 26. இவர், தன் மேல் படிப்பிற்காக கடந்த 2022ல் அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு சென்றார். விரைவில் தன் படிப்பை நிறைவு செய்ய இருந்த நிலையில், அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றவும் திட்டமிட்டிருந்தார்.

கடந்த 19ம் தேதி ரவி தேஜாவை அங்குள்ள எரிவாயு நிலையத்தில், மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் குறித்து சிகாகோவில் மேல்படிப்பு முடித்துள்ள கொய்யடா ஸ்ரேயா, தனது குடும்பத்தின் நிலை குறித்து இணையதளம் ஒன்றில் பதிவிட்டிருந்தார்.


'நினைத்து கூட பார்க்க முடியாத சம்பவத்தால் எங்களின் குடும்பத்தில் ஒரு உயிர் பிரிந்து விட்டது. இந்த வேதனையான காலத்தில் எதிர்பாரத விதமாக, ரவிதேஜாவின் கல்விக்கடன், இறுதிச்சடங்கிற்கான செலவு உள்ளிட்ட நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளோம். எனவே, நண்பர்கள், நல்ல உள்ளம் கொண்டோர் எங்களின் குடும்பத்திற்கு உதவ வேண்டும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், நிதி நெருக்கடியால் சிக்கி தவிக்கும் ரவி தேஜாவின் குடும்பத்தினருக்காக, அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் 97,000 டாலர் நிதியை திரட்டியுள்ளனர். இது இந்திய மதிப்பில் 83 லட்சம் ரூபாய். சுமார் 3,000 பேர் இதற்கு உதவியுள்ளனர். 1,50,000 டாலரை திரட்டி கொடுக்க முடியும் என்று இந்த நிதியை திரட்டியவர்கள் நம்புகின்றனர்.

Advertisement