கர்நாடகக்காரரால் வந்தது வினை; ஈரோட்டில் தேர்தல் அதிகாரி மாற்றம்
ஈரோடு; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு பரிசீலனையில், குழப்பம் ஏற்படுத்தி, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட தாமதமானதால், தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் மாற்றப்பட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 58 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். கடந்த, 18ல் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மணீஷ் தலைமையிலான பரிசீலனையில், மூன்று மனு தள்ளுபடியானது.
கடந்த, 20ல் மனுவை திரும்ப பெறும்போது மதியம், 3:00 மணிக்குள், 8 பேர் திரும்ப பெற்றனர். பின், 47 வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு நடந்தது. அப்போது, கர்நாடகாவை சேர்ந்த பத்மாவதி என்ற வேட்பாளர், அம்மாநில வாக்காளராக இருப்பதாலும், சட்டசபை தேர்தல் விதிப்படி, தமிழகத்தில் போட்டியிட இயலாது என்றும், அவருக்கு சின்னம் ஒதுக்கக்கூடாது எனவும், சுயேட்சைகள் போர்க்கொடி உயர்த்தினர்.
தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் உட்பட தேர்தல் பிரிவினர், அம்மனு முற்றிலும் கர்நாடகாவை சேர்ந்தவர்களால் தாக்கலானது என்பதை கவனிக்காததால், மாலை, 5:00 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்க வேண்டிய நிலை மாறி, அதிகாலை, 3:30 மணிக்கு தேர்தல் ஆணைய உத்தரவு பெற்று, பத்மாவதி மனுவை நிராகரித்து, இறுதி பட்டியல் வெளியிட்டனர்.
இந்த குளறுபடிக்கு மணீஷ் மற்றும் அதிகாரிகளே காரணம் எனக்கூறி, தேர்தல் ஆணையம் மணீஷை, உடனே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினர்.
அவருக்கு பதிலாக, ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்தை நியமித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக பொறுப்பேற்றார். பின், தேர்தல் தொடர்பான பணிகளை பார்வையிட்டார்; அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்.