விரதம் இருக்க சிறந்த நேரம்
உடல் பருமன் என்பது உலகம் முழுதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய ஒரு வாழ்வியல் நோய். இதனால், நீரிழிவு, இதய நோய்கள், ஏன் சில வகை புற்று நோய்கள் கூட ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடல் பருமனை குறைப்பதற்கு பல்வேறு மருத்துவ ஆய்வுகள் நடந்து வருகின்றன.
உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு வாயிலாக பருமனை குறைக்க முடியும் என்றாலும் அனைவருக்கும் இது சாத்தியப்படுவது இல்லை. உணவு கட்டுப்பாட்டில் கூட எந்த வகை உணவு பருமனை குறைக்கும் என்பதிலும் பல்வேறு ஆய்வுகள் வந்துள்ளன. அவற்றுள் சில, ஒன்றோடு ஒன்று முரண்பட்டும் உள்ளன.
இரவு உணவை தவிர்த்து விட்டு மாலை 5:00 மணிக்கே சாப்பிட்டு முடித்து விடுவது நல்லது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
இன்டர்மிடென்ட் பாஸ்டிங் (Intermittent fasting) எனப்படும் ஒரு விதமான விரத முறை தற்போது பிரபலமாகி வருகிறது. இதிலும் கூட எந்த நேரத்தில் உணவு சாப்பிடலாம்; எந்த நேரத்தில் விரதம் இருக்கலாம் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த க்ரானடா பல்கலை ஆய்வாளர்கள், பல்வேறு அறிவியல் அமைப்புகளுடன் இணைந்து மிகப்பெரிய ஆய்வு ஒன்றை செய்தனர். மொத்தம் 197 பேர் பங்கேற்ற இந்த ஆய்வு, 12 வாரம் தொடர்ந்து நடந்தது. பங்கேற்றவர்கள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டனர்.
ஒரு பகுதியினர் காலை 9:00 - 5:00 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் உணவு உண்ணலாம்; மற்ற நேரங்களில் விரதம் இருக்க வேண்டும். அடுத்த பகுதியினர் மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை சாப்பிடலாம்; மற்ற நேரங்களில் கூடாது. இன்னும் ஒரு பகுதியினர் இரவு 12:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை எந்த நேரமும் சாப்பிடலாம். மற்ற நேரங்களில் விரதம் இருக்க வேண்டும். இவ்வாறு வரையறுக்கப்பட்ட பின், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர்.
ஆய்வின் இறுதியில், மற்ற இரண்டு பகுதியினரை காட்டிலும் காலை 9:00 -முதல் மாலை 5:00 மணி வரை மட்டும் உணவு உட்கொண்டு, மற்ற நேரங்களில் விரதம் இருந்தவர்கள் நல்ல மாற்றம் கண்டனர். இவர்களுக்கு உடல் பருமன், குறிப்பாக வயிற்று பகுதிகளில் இருக்கிற கொழுப்பு குறைந்து இருப்பது தெரிந்தது. ஆகவே, இன்டர்மிடென்ட் பாஸ்டிங் இருப்பவர்களுக்கு சரியான நேரம் இதுதான் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.