ஹாக்கி இந்தியா லீக்: தமிழக அணி வெற்றி

ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் தமிழக அணி 4-3 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

ரூர்கேலா (ஒடிசா), ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. ரூர்கேலாவில் நடந்த லீக் போட்டியில் தமிழகம், ஐதராபாத் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. தமிழகம் சார்பில் பிளேக் கோவர்ஸ் (4வது நிமிடம்), ஜிப் ஜான்சென் (37வது) தலா ஒரு கோல் அடித்தனர். ஐதராபாத் அணிக்கு டிம் பிராண்ட் (3வது நிமிடம்), மைக்கோ காசெல்லா (59வது) தலா ஒரு கோல் அடித்தனர்.

பின், போட்டி 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. அபாரமாக ஆடிய தமிழக அணி 4-3 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. தமிழக அணிக்கு 2, ஐதராபாத் அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தமிழக அணி 17 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ஐதராபாத் அணி 14 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்தது.


டில்லி ஆறுதல்
ரூர்கேலா (ஒடிசா), ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் முதல் சீசன் நடக்கிறது. ராஞ்சியில் நடந்த லீக் போட்டியில் ஒடிசா, டில்லி அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தது. டில்லி அணிக்கு நவ்னீத் கவுர் (28வது நிமிடம்), ஒடிசா அணிக்கு யிப்பி ஜான்சென் (35வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.

பின் போட்டி 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் டில்லி அணி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. டில்லி அணிக்கு 2, ஒடிசா அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டன.


டில்லி அணி 5 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தது. ஒடிசா அணி 11 புள்ளிகளுடன் 'டாப்-2' இடத்தை உறுதி செய்து பைனலுக்குள் நுழைந்தது.

Advertisement