டெல்டாவில் மத்திய குழு ஆய்வு

நாகப்பட்டினம்:டெல்டாவில் கனமழையால் பயிர்கள் சாய்ந்து விவசாயிகள் வேதனையில் உள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு வெறும் கண்துடைப்பு என விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கொட்டிய கனமழை, கடும் பனி பொழிவு காரணமாக, விவசாயிகள் அறுவடை செய்யும் நெல் மணிகளில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.

நேரடி கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதமுடைய நெல் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். விவசாயிகள் சூழல் கருதி 22 சதவீதமாக ஈரப்பதம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு, மாநில அரசு கோரிக்கை வைத்தது.இதையடுத்து, மத்திய உணவு துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உதவி இயக்குனர்கள் நவீன், ப்ரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகியோர் அடங்கிய குழுவினர், டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று நாகை மாவட்டத்தில் நவீன், ராகுல் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நுகர்பொருள் வாணிப கழக இயக்குனர் அண்ணாதுரை, கலெக்டர் ஆகாஷ் உடனிருந்தனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்பு செயலர் தமிழ்செல்வன் கூறுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள். ஒரு வாரத்திற்கு முன் உலர வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டவை. ஆண்டுதோறும் மத்திய குழுவினர் வருகின்றனர். ஆய்வு செய்கின்றனர். முடிவு வருவதற்குள் கொள்முதல் முடிந்து விடுகிறது. மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு, சேத நிலவரம் குறித்து அறிக்கை சமர்பிப்பார்கள். விவசாயிகள் தங்கள் வேதனைக்கு தீர்வு ஏதாவது கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு கூட தகவல் தெரிவிக்காமல், அரசுக்கு சாதகமான சிலரை நிற்க வைத்து, கண் துடைப்புக்காக ஆய்வு நடந்துள்ளது' என்றார்.

Advertisement