பிடிவாரன்ட் உத்தரவுகளை செயல்படுத்த திட்டம் அவசியம்: உயர் நீதிமன்றம்

சென்னை:'நீதிமன்றம் பிறப்பிக்கும், 'பிடிவாரன்ட்' உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்' என, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் வடிவேல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'வடிவேல் மீது பல ஆண்டுகளாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதால், ஜாமின் வழங்கக்கூடாது' என, காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு, 'வழக்குகளில் தொடர்புடைய நபர்கள், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தால், அவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்படும் பிடிவாரன்ட் உத்தரவுகளை ஏன் செயல்படுத்துவதில்லை' என, கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக, சென்னை கீழ்ப்பாக்கம் காவல் துணை கமிஷனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இந்த வழக்கு நேற்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழ்ப்பாக்கம் சரக துணை கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் மயிலாப்பூர் துணை கமிஷனர் ஹரிசரண் ஆஜரானார்.

அப்போது, 'அதிநவீன தொழில்நுட்பம் உள்ள காலத்திலும், ஒரே காவல் சரக எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், இதுபோல நடப்பது ஏற்று கொள்ள முடியாது என்பதால், இவ்விவகாரத்தில் செயல் திட்டம் வகுக்க வேண்டும்' என, நீதிபதி தெரிவித்தார்.

அதற்கு, 'திட்டம் வகுப்பது தொடர்பாக ஆலோசனை செய்து, நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படும்' என, துணை கமிஷனர் பதிலளித்தார்.

இதையடுத்து, அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக, அவருக்கு விலக்களித்த நீதிபதி, விசாரணையை ஜன., 31ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Advertisement