ஜீப்பை கவிழ்த்த ஒற்றை யானை உயிர் தப்பிய மின் ஊழியர்கள்
பொள்ளாச்சி,:பொள்ளாச்சி அருகே ரோட்டில் வலம் வந்த ஒற்றை யானை, அவ்வழியாக சென்ற மின்வாரிய அதிகாரிகளின் ஜீப்பை பள்ளத்தில் தள்ளி விட்டது. மூன்று ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், ஒற்றை யானை சில மாதங்களாக உலா வருகிறது. ஆழியாறு கவியருவி, அணை அருகே இதன் நடமாட்டம் உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஆழியாறு அருகே, நவமலை மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்வாரிய இளநிலை பொறியாளர் விஸ்வநாதன், 54, ஊழியர்கள் செல்வராஜ், 50, சந்தோஷ், 45, ஆகியோருடன், வழக்கமான அலுவல் பணிகளை முடித்து, மேல் ஆழியாறுக்கு ஜீப்பில் சென்றனர்.
நவமலை ஆதாளி அம்மன் கோவில் அருகே சென்ற போது, ரோடு திருப்பத்தில் யானை வருவதை கண்ட மின்வாரிய ஊழியர்கள், வாகனத்தை, 'ரிவர்ஸ்' எடுத்தனர். அப்போது, ஒற்றை யானை வேகமாக ஓடி வந்து, வாகனத்தின் முன்பகுதியை அழுத்தி, 10 அடி பள்ளத்தில் தள்ளியது. வாகனத்தில் இருந்த, மின்வாரிய ஊழியர்கள் சப்தம் எழுப்பாமல் அமைதியாக இருந்தனர்.
யானை நகர்ந்து சென்ற பின், மூவரும் லேசான காயத்துடன்ஜீப்பில் இருந்து வெளியே வந்தனர். ஆழியாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று ஆழியாறு போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதற்கான வீடியோவையும் போலீசில் ஒப்படைத்தனர்.