'பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி'

சென்னை:ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி அறிக்கை:

மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக, ஜன.22ம் தேதி நேரில் கள ஆய்வு செய்தோம். மதுரை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து, 'பிரச்னையின்றி சுமுகமாக கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ, அதேபோல் நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தினோம்.

இது தொடர்பாக கலெக்டரிடமும் பேசினோம். நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, அங்கு தர்கா, காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.

தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகின்றனர். எனவே தேவையற்ற அசவுகரியத்தை ஏற்படுத்தாமல், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வலியுறுத்தினோம்.

இது தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் பேசிய போது, 'உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை. ஆடு கோழி எடுத்து செல்வதற்கு இருக்கும் தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்' என்றார். 'சமைத்த அசைவ உணவை எடுத்து செல்ல தடை இல்லை' எனப் போலீசார் கூறியதை தொடர்ந்து, சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று, மக்கள் உண்டனர்.

விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு, கடந்த காலங்களில் இருந்தது போல், மக்கள் சிரமமின்றி தர்கா சென்று வர, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மதுரை மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கும் நன்றாக தெரியும். நுாற்றாண்டு பழமை மிக்க சிக்கந்தர் தர்கா, மலை மீது அமைந்துள்ளது; அங்கு ஆண்டாண்டு காலமாக, ஆடு கோழிகள் நேர்ச்சை செய்யப்பட்டு உணவு வழங்கப்படுகிறது.

தற்போது ஏதோ புதிதாக, அசைவ உணவு கொண்டு சென்று உண்பதைப் போன்ற தோற்றத்தை, அரசியல் ஆதாயத்திற்காக சிலர் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு வரை எந்த பிரச்னையும் இல்லாமல், அங்கு ஆடு, கோழிகள் நேர்ச்சை செய்யப்பட்டன. இது நுாறாண்டுகளுக்கும் மேலாக தொடரும் நடைமுறை.

அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு தனி பாதை உள்ளது; சிக்கந்தர் தர்காவிற்கு தனி பாதை உள்ளது. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அனைத்து மத மக்களும் அங்கு நல்லிணக்கத்துடன் ஒற்றுமையுடன் இணைந்து சென்று வந்து கொண்டிருக்கின்றனர்.

இத்தனை ஆண்டுகள், எந்த பிரச்னையும் வராத நிலையில், தற்போது இதை வைத்து அரசியல் ஆதாயம் காண வேண்டும் என்ற நோக்கத்தில், இதை அரசியலாக்கி கொண்டிருக்கின்றனர்.

அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கையின்படி, தர்கா அமைந்துள்ள, 50 சென்ட் நிலம், தமிழக வக்பு வாரியத்திற்கு உட்பட்டது. அந்த பகுதியில் தான் தர்கா அமைந்துள்ளது. ஆண்டாண்டு காலமாக நாம் கடைபிடிக்கும் நல்லிணக்கத்தை, தொடர்ந்து கடைபிடிப்போம்; பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement