இந்திய பெண்கள் அணி அபாரம்: இலங்கை அணியை வீழ்த்தியது
கோலாலம்பூர்: 'டி-20' உலக கோப்பை (19 வயது) 'சூப்பர்-6' சுற்றுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் 60 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. கோலாலம்பூரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு கமலினி (5), சானிகா (0), கேப்டன் நிக்கி பிரசாத் (11), பவிகா (7) ஏமாற்றினர். திரிஷா (49) நம்பிக்கை தந்தார். மிதிலா (16), ஜோஷிதா (14) ஓரளவு கைகொடுத்தனர். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 59 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ராஷ்மிகா (15) ஆறுதல் தந்தார். இந்தியா சார்பில் ஷப்னம், ஜோஷிதா, பருனிகா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
முதலிரண்டு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், மலேசியாவை வீழ்த்திய இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி 6 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்து 'சூப்பர்-6' சுற்றுக்குள் நுழைந்தது.