ரோகித் சர்மா, சுப்மன் ஏமாற்றம் * ரஞ்சி போட்டியில்...
மும்பை: ரஞ்சி கோப்பை போட்டியில் ரோகித் சர்மா ஏமாற்றம் அளித்தார்.
இந்திய அணி சமீபத்திய நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால், இந்திய வீரர்கள் அனைவரும், உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டுமென பி.சி.சி.ஐ., வலியுறுத்தியது. டெஸ்ட் அணி கேப்டன் ரோகித் சர்மா, 2015க்குப் பின் முதன் முறையாக ரஞ்சி கோப்பை போட்டியில் பங்கேற்றார்.
மும்பையில் துவங்கிய 'ஏ' பிரிவு லீக் போட்டியில் மும்பை, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. மும்பை அணிக்காக பங்கேற்ற ஜெய்ஸ்வால் 4, ரோகித் 3 ரன்னில் அவுட்டாகினர். கேப்டன் ரகானே 12 ரன் எடுத்தார். ஷர்துல் தாகூர் (51), தனுஷ் (26) கைகொடுக்க, மும்பை அணி முதல் இன்னிங்சில் 120 ரன்னுக்கு சுருண்டது.
பின் களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் அணி, முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 174/7 ரன் எடுத்து, 54 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
ரிஷாப் ஏமாற்றம்
ராஜ்கோட்டில் நடக்கும் போட்டியில் டில்லி, சவுராஷ்டிரா மோதுகின்றன. முதலில் களமிறங்கிய டில்லி அணிக்கு கேப்டன் படோனி (60), யாஷ் துல் (44) கைகொடுத்தனர். 2017-18 க்குப்பின் ரஞ்சி போட்டியில் பங்கேற்ற ரிஷாப் பன்ட், 1 ரன்னில் அவுட்டானார். டில்லி அணி முதல் இன்னிங்சில் 188 ரன்னில் ஆல் அவுட்டானது. சுழலில் அசத்திய ரவிந்திர ஜடேஜா, 5 விக்கெட் சாய்த்தார்.
முதல் நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 163/5 ரன் எடுத்து 25 ரன் பின்தங்கி இருந்தது.
சுப்மன் '4'
பெங்களூருவில் நடக்கும் போட்டியில் பஞ்சாப், கர்நாடகா மோதுகின்றன. துவக்க வீரர் சுப்மன் கில் 4 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்களும் கைவிட, முதல் இன்னிங்சில் பஞ்சாப், 55 ரன்னுக்கு சுருண்டது. முதல் நாள் முடிவில் பெங்களூரு அணி முதல் இன்னிங்சில் 199/4 ரன் எடுத்து, 144 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
சித்தார்த் சதம்
சேலத்தில் நடக்கும் 'டி' பிரிவு போட்டியில் தமிழகம், சண்டிகர் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற சண்டிகர் பீல்டிங் தேர்வு செய்தது. தமிழக அணிக்கு முகமது அலி (40), ஜெகதீசன் (63) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பாபா இந்திரஜித் 49, கேப்டன் சாய் கிஷோர் 10 ரன் எடுத்தனர். ஆன்ட்ரே சித்தார்த் 106 ரன் அடித்து உதவினார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 301 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.