இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் குகேஷ்

புதுடில்லி: இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் ஆனார் தமிழகத்தின் குகேஷ்.
நெதர்லாந்தில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவின் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட்டை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 72வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இத்தொடரில் இவர் பெற்ற இரண்டாவது வெற்றி இது.
புதிய 'நம்பர்-1'
ஐந்து சுற்று முடிந்த நிலையில், நேற்று சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ('பிடே') 'லைவ்' ரேட்டிங் பட்டியல் வெளியானது. உலக சாம்பியன் குகேஷ், 2784 புள்ளியுடன் இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார். உலக அளவில் 'நம்பர்-4' வீரர் ஆனார். நெதர்லாந்து தொடரில் 2 வெற்றி (3 'டிரா') பெற்றதால் 7 புள்ளி கூடுதலாக பெற, இந்த முன்னேற்றம் கிடைத்தது.
அர்ஜுன் சரிவு
கடந்த 2024, செப்., முதல், 2801 புள்ளியுடன் இந்தியாவின் 'நம்பர்-1' வீரராக இருந்த அர்ஜுன் எரிகைசி (2779.5) இரண்டாவது இடத்திற்கு பின்தங்கினார். சர்வதேச அரங்கில் 5வது இடத்தில் உள்ளார். நெதர்லாந்து தொடரில் 2 'டிரா', 3 தோல்வி அடைந்ததால், 21.5 புள்ளி குறைந்தார் அர்ஜுன்.
தமிழகத்தின் பிரக்ஞானந்தா (2753) முதன் முறையாக 10வது) இடம் பிடித்தார். இந்திய அளவில் 'நம்பர்-3' வீரர் ஆனார். சர்வதேச அளவில் ஆனந்த், 11வது இடத்தில் உள்ளார். இந்திய அளவில் 4வது இடம் பெற்றார்.
கார்ல்சன் 'நம்பர்-1'
சர்வதேச அளவில் நார்வேயின் கார்ல்சன் (2832.5) தொடர்ந்து 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். அமெரிக்க வீரர்கள் ஹிகாரு நகமுரா (2802), பேபியானோ காருணா (2798) 2, 3வது இடத்தில் உள்ளனர்.
மற்ற இந்திய வீரர்கள் அரவிந்த் சிதம்பரம் 22 (2728.9), விதித் சந்தோஷ் 25வது (2721), இடங்களில் உள்ளனர். இந்திய அளவில் அரவிந்த் சிதம்பரம் 5, விதித் 6வது இடம் பிடித்தனர்.

Advertisement