நடைபாதை கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு

கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலக சாலையில், நடைபாதை வியாபாரிகள், கடைகளை மாற்று இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் 40க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் உள்ளன. இங்கு, மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட உள்ளதாக கூறி 20க்கும் மேற்பட்ட கடைகளை நேற்று அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளுமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததுடன் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

அங்கு, நகரமைப்பு அலுவலர் ராஜசேகரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது, தெருவோர வாழ்வாதார வியாபாரிகள் சட்டத்தின் படி அனைவருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது சட்டத்திற்கு புறம்பாக கடைகளை அகற்ற முயன்றதை நிறுத்த வேண்டும். கமிட்டி மூலம் ஆலோசனை நடத்தி, மாற்று இடம் கொடுத்து கடைகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்றனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி கமிஷனரிடம் மனு கொடுத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து, வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement