ஆவணமின்றி தங்கியிருக்கும் இந்தியர்களை அழைத்துக்கொள்ள தயாராக உள்ளோம் அமெரிக்காவில் ஜெய்சங்கர் உறுதி

வாஷிங்டன் :''முறையான ஆவணமின்றி அமெரிக்காவில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீண்டும் இந்தியா அழைத்துக் கொள்ள எப்போதும் தயாராக உள்ளோம்,'' என, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக அமெரிக்காவில் தங்கியுள்ள அவர், அந்நாட்டின்புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இதை தொடர்ந்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெய்சங்கர் கூறியதாவது:

இந்திய திறமைகளுக்கு உலக அளவில் அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதே நேரம், சட்டவிரோதமாக ஒரு நாட்டுக்குள் இடம் பெயர்வதை நாங்கள் உறுதியுடன் எதிர்க்கிறோம்.

ஏனென்றால், சட்டத்திற்குப்புறம்பாக ஏதாவது நடக்கும் போது,​பல சட்டவிரோதச் செயல்களும் அதனுடன் சேர்ந்துகொள்கின்றன. இது விரும்பத்தகாதது.

பிற நாடுகளைப் போல அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றியோ, விசா காலம் முடிந்தும் வெளியேறாமல் இருக்கும் இந்தியர்களை மீண்டும் இந்தியா அழைத்துக்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம்.

அதே நேரம், அமெரிக்க விசா பெறுவதற்கு 400 நாட்களுக்கு மேல் காத்திருக்கும் நிலை உள்ளது. இதில் பரஸ்பர உறவு சரிவர பயன்படவில்லை என்பதை அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் குறிப்பிட்டேன். அதை கவனத்தில் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படும் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், ''ஆமாம் விவாதித்தோம். அது பற்றி விரிவாக இப்போது பேசுவது சரியாக இருக்காது,'' என்றார்.

அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த கேள்விக்கு, ''அந்த விவகாரத்தை இப்போது எழுப்பவில்லை. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துாதரகம் தாக்கப்பட்டது, துாதரக அதிகாரிகள் மிரட்டப்பட்டது மிகத்தீவிரமான பிரச்னை.

''இதற்கு அமெரிக்கா பொறுப்பேற்று, அதை செய்தவர்களை தண்டிக்க வேண்டும்,'' என, ஜெய்சங்கர் கூறினார்.

பாக்., உடன் வர்த்தகம் நின்றது ஏன்?

செய்தியாளர்கள் சந்திப்பில், பாகிஸ்தான் உடனான வர்த்தகம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜெய்சங்கர் அளித்த பதில்:பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை நாங்கள் நிறுத்தவில்லை. பாகிஸ்தான் தான், 2019ல் அந்த முடிவை எடுத்தது. வர்த்தகத்தை மீண்டும் துவங்குவது குறித்து பேச்சு நடத்த பாக்., இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பாகிஸ்தானை எப்போதுமே எங்கள் விருப்பத்துக்குரிய நாடாகவே பார்க்கிறோம். ஆனால் அவர்கள் அப்படி நினைக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement