ஐபோன், ஆண்ட்ராய்டு போனுக்கு ஏற்றபடி கட்டணம் மாறுமா? ஊபர், ஓலாவுக்கு நோட்டீஸ்

புதுடில்லி : மொபைல்போன் வகைகளுக்கு ஏற்ப வாடகை கார்களின் கட்டணங்கள் மாறுவதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக பதிலளிக்கும்படி, 'ஊபர், ஓலா' நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மொபைல்போன் செயலி வாயிலாக வாடகை கார்கள் சேவையை அளிக்கும் ஊபர், ஓலா நிறுவனங்கள் மீது, சமீபத்தில் பல புகார்கள் எழுந்தன.

குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல வாடகை கார்களை முன்பதிவு செய்யும்போது, ஆண்ட்ராய்டு போன்களில் ஒரு கட்டணமும், ஐபோன்களில் அதிக கட்டணமும் வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து, மொபைல்போன் வகைகளுக்கு ஏற்ப கட்டணங்கள் மாறுமா என்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, இந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கீழுள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், இந்த நோட்டீஸை அனுப்பி உள்ளது.

Advertisement