17 பேர் மர்ம மரண விவகாரம் இறப்புக்கு நச்சு காரணம்?

1

புதுடில்லி, “ஜம்மு - காஷ்மீரில் 17 பேர் மர்மமான முறையில் இறந்ததற்கு, நோய் தொற்று காரணமில்லை; அவர்களது உடல் மாதிரிகளில் நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது,” என, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தின் பாதல் கிராமத்தில் வசிக்கும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, கடந்த மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதில், அடுத்தடுத்து 17 பேர் உயிரிழந்தனர்; 38 பேர் பாதிக்கப்பட்டனர்.

உயிரிழப்பு ஏற்பட்ட கிராமத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆய்வு செய்ய, பல்வேறு அமைச்சகங்களின் 11 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. பாதல் கிராமத்துக்கு சென்ற அக்குழு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது.

உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., பரிசோதனைக் கூடத்தில், இந்த சோதனை நடந்தது. இதில், இறந்தவர்களின் உடல்களில் நச்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று கூறுகையில், “17 பேரும் நோய் தொற்று காரணமாக இறக்கவில்லை என்பது, பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்களில் நச்சு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

''அது எந்த வகையிலான நச்சு என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது. ஏதேனும் சதி இருப்பது தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்டு ரஜோரி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அங்குள்ள மூத்த தொற்றுநோயியல் நிபுணர் கூறுகையில், ''இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உணவில் நச்சு கலந்திருப்பதாக சந்தேகிக்கிறோம்.

''இதற்காக, 200 உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; 10 நாட்களுக்கு பின்னரே முடிவுகள் தெரியவரும்,'' என்றார்.

Advertisement