இன்றும் உயர்ந்தது தங்கம்; ஒரு சவரன் விலை ரூ.60,440!


சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, இன்று (ஜன.,24) சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ. 60,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2024 ஜன., 1ல் ஒரு சவரன் தங்கம் ஜி.எஸ்.டி., சேர்த்து 48,698 ரூபாய்க்கு விற்பனையானது. 2025ம் ஆண்டு ஜன., 1ல், 58,916 ரூபாயாக அதிகரித்து இருந்தது. ஜனவரி 22ம் தேதி ஜி.எஸ்.டி., சேர்த்து, 62 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது; செய்கூலி, சேதாரம் தனி. நேற்று (ஜன.,23) தங்கம் விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை, இன்று (ஜன.,24) சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது. ஒரு கிராம் 30 ரூபாய் உயர்ந்து 7,555 ரூபாய்க்கும், ஒரு சவரன் 60,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை கடந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.



சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்காவுக்கு எதிராக, சீனாவும், ரஷ்யாவும் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இவற்றை எல்லாம் பார்க்கும்போது, மூன்றாம் வர்த்தகப்போர் உருவாவதற்கு வாய்ப்பு இருப்பதாக சர்வதேச முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

இதனால், பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருவதால், அதன் விலை உயர்ந்துள்ளது. நம் நாட்டில் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement