மஹாராஷ்டிராவில் ஆயுத தொழிற்சாலையில் வெடிவிபத்து; 8 பேர் பரிதாப பலி
மும்பை: மஹாராஷ்டிராவில் ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிலாளர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் பண்டாராவில் வெடி மருந்து தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் இன்று (ஜன.,24) பணியில் ஈடுபட்டு இருந்தனர். திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
வெடி மருந்துகள் உராய்வு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 'விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பின்னர் விபத்துக்கான காரணம் தெரியவரும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மஹாராஷ்டிராவின் பந்தாராவில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். மீட்பு படையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு கூரை இடிந்து விழுந்துள்ளது. அதை ஜே.சி.பி., உதவியுடன் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த போது 12 பேர் இருந்துள்ளனர். தற்போது 2 பேரை மீட்டுள்ளோம். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது' என கலெக்டர் சஞ்சய் கோல்டே தெரிவித்தார்.