எழுதி வைக்காமல் 10 நிமிடம் பேசணும்; முதல்வருக்கு சீமான் சவால்
கோவை: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரையும், ஈ.வெ.ரா., பற்றி எழுதி வைத்து படிக்காமல் பேசச் சொல்லுங்கள் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவையில் அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததாவது; தி.மு.க.,வில் இணையும் முன்னரே 3000 பேர் சேருகிறார்கள் என்று எப்படி சொல்கிறார்கள். தி.மு.க.,வையும் சேர்த்து நாங்கள் தான் வளர்க்க வேண்டியது. நாங்கள் இன்னமும் பேசவே ஆரம்பிக்க வில்லை. தி.க.,வில் இருந்து தி.மு.க., பிறந்ததற்கு காரணம் என்ன?
பிரபாகரனை நான் 8 நிமிடம் சந்தித்தேன், 10 நிமிடம் சந்தித்தேன் என்று ஒவ்வொருவர் கூறுகின்றனர். இன்னும் சிலர் சந்திக்கவே இல்லை என்கின்றனர். நான் சந்தித்து உண்மையா? படம் பொய் என்பது உண்மையா? எதை நம்புகிறீர்கள். இப்போது, நான் சொல்றேன், பிரபாகரனை சந்திக்கவில்லை. எதை நீங்கள் நம்புகிறீர்கள்?
திராவிடத்தின் குறியீடு ஈ.வெ.ரா. தமிழ் தேசியத்தின் குறியீடு பிரபாகரன். இவை இரண்டும் தான் மோதவேண்டும். மூன்றரை ஆண்டுகளில் 1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசிய குறிப்பு இருக்கிறது.
அதற்கு எல்லாம் அனுமதி கொடுத்த நீங்கள் (முதல்வர் ஸ்டாலின்) அண்ணா பல்கலை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக எங்களுக்கு போராட அனுமதி மறுத்தது ஏன்?
தி.மு.க.,வில் சேர்ந்த யாராவது ஒருவரை ஈ.வெ.ரா.வை பற்றி பேசச் சொல்லுங்கள். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி இருவரையும், ஈ.வெ.ரா., பற்றி எழுதி வைத்து படிக்காமல் பொது தளத்தில் பேசச் சொல்லுங்கள். இந்த தலைவர்களுக்கு துணிவு இருக்கிறதா?
பொது தளத்தில் பிரபாகரனை பற்றி பேசி நான் ஓட்டு கேட்கிறேன். நீங்கள் ஈ.வெ.ரா.,வை பற்றி பேசி ஓட்டுக் கேளுங்கள், யார் பெரிய ஆள் என்று தெரிந்துவிடும். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் தமிழ் சமூகத்துக்கு விடிவு.
இவ்வாறு அவர் பேசினார்.