பூஜா கெட்கர் விவகாரம்! யு.பி.எஸ்.சி. தேர்வு விதிகளில் வந்தது மாற்றம்!

புதுடில்லி: பூஜா கெட்கர் விவகாரம் எதிரொலியாக, தேர்வு விதிகளில் யு.பி.எஸ்.சி., புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.



மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 979 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், விண்ணப்பதாரர்களுக்கான புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட முறைகேடு தான் முக்கிய காரணம்.


மஹாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அந்தஸ்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பூஜா கெட்கர் என்பவர் சேர்ந்தார். இவர், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் பெறுவதில் முறைகேடு செய்திருப்பதும், ஓ.பி.சி., இட ஒதுக்கீட்டில் கூடுதல் தேர்வு வாய்ப்புகளை பெறுவதற்காக, பெயரை மாற்றி இருப்பதும் பின்னர் தெரிய வந்தது.


இதையடுத்து, அவர் மீது மத்திய பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., மோசடி வழக்கு தொடர்ந்தது. பூஜா கெட்கரின் தேர்ச்சியை ரத்து செய்து, இனி அவர் தேர்வு எழுதவும் தடை விதித்தது.


இத்தகைய மோசடி இனி நடக்காமல் தடுப்பதற்காக, யு.பி.எஸ்.சி., புதிய விதிகளை உருவாக்கி இந்த ஆண்டில் அமல் செய்துள்ளது.


இனி யு.பி.எஸ்.சி., முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, கல்வித்தகுதி, சாதி, உடல்தகுதி ஆகிய சான்றிதழ்களை கட்டாயம் இணைத்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.


முன்னதாக இதுபோன்ற சான்றிதழ்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை, மெயின் தேர்வுக்கு போட்டியாளர் பாஸ் ஆகும் போது தான் இணைக்கவேண்டும் என்று இருந்தது, குறிப்பிடத்தக்கது.

Advertisement