கிடப்பில் இருக்குது ரூ.70,744 கோடி; தொழிலாளர் நல நிதியை விடுவிக்காத மாநிலங்கள்

3

புதுடில்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்கள் கட்டுமான தொழிலாளர் நல நிதி ரூ.70,744 கோடியை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டிருப்பது தெரிய வந்துள்ளது.



கடந்த 2024ம் செப்டம்பர் 30ம் தேதி வரையில் அனைத்து மாநிலங்களில் உள்ள கட்டட மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்களின் நலவாரியத்தில் 5 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 723 தொழிலாளர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கான நலநிதி, கட்டுமான தொழில் செய்யும் நிறுவனங்களிடம் இருந்து வரியாக வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் 1,17, 507 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் பாதி கூட, தொழிலாளர் நலனுக்கு விடுவிக்கப்படவில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.

இந்திய கட்டுமான தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் அர்கா ராஜ்பண்டிட் தகவல் அறியும் சட்டத்தின் மூலம், மத்திய தொழிலாளர் நலத்துறையிடம் சில தகவல்களை கேட்டிருந்தார்.

அதில், ரூ.67,669 கோடி மட்டுமே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.70,744 கோடி இதுவரை பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அதிகபட்சமாக, மஹராஷ்டிரா மாநிலம் 19 ஆண்டுகளில் ரூ.19,489 கோடி வசூலித்துள்ளது. அதில், ரூ.13,683 கோடியை மட்டும் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் கர்நாடகா ரூ.7,921 கோடியும், உத்தரபிரதேசம் ரூ.7.826 கோடியை விடுவித்துள்ளது.

'கேரளாவைத் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கட்டட மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்கள் நலச் சட்டத்தை அமல்படுத்துவதில்லை' என்று அர்கா ராஜ்பண்டிட் தெரிவித்துள்ளார்.

Advertisement