முன்னாள் அதிபர் படுகொலை ஆவணங்களை வெளியிட இந்நாள் அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

6

வாஷிங்டன்: முன்னாள் அதிபர் ஜான் கென்னடி, இவரது சகோதரர் ராபர்ட் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் படுகொலை தொடர்பான ஆவணங்களை வெளியிட அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


அமெரிக்காவின், 35வது அதிபராக பதவி வகித்தவர், ஜான் எப் கென்னடி. இவரது குடும்பத்தை சேர்ந்த பலர், தொடர்ந்து மர்மமான முறையிலேயே மரணம் அடையும் துரதிர்ஷ்டம் தொடர்ந்து நடந்தது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி, 1963ல், டல்லாசில், லீ ஹார்வி என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசியல் காரணங்களுக்காக இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டாலும், இந்த கொலைக்கான மர்மம், இன்னும் நீடிக்கிறது.

இவரது சகோதரர், ராபர்ட் கென்னடி, 1968ல், லாஸ் ஏஞ்சல்சில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த, 1999ல், ஜான் கென்னடியின் மகன், ஜூனியர் கென்னடியும், அவரது மனைவியும், விமான விபத்தில் உயிரிழந்தனர். ஜான் கென்னடியின் மற்றொரு சகோதரர், டெட் கென்னடியும், 1964ல் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.



ஜான் கென்னடியின் சகோதரி, கேதலின், 1948ல் நடந்த விமான விபத்தில் மரணமடைந்தார். ராபர்ட் கென்னடியின் மகன், டேவிட் கென்னடி, 1984ல், அளவுக்கு அதிமான மருந்துகளை சாப்பிட்டால், உயிரிழந்தார். ராபர்ட் கென்னடியின் மற்றொரு மகன், மைக்கேல், 1997ல் நடந்த விபத்தில் உயிரிழந்தார். கென்னடி குடும்பத்தில், மர்ம மரணங்கள் தொடர்ந்து வந்தது.


இதில் உள்ள மர்மங்களை கொண்டு வர, தற்போது அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்காக, அவர் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார். முன்னாள் அதிபர் ஜான் கென்னடி, இவரது சகோதரர் ராபர்ட் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் படுகொலை தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் என டிரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.


படுகொலை பற்றிய முழு ஆவணங்களை வெளியிடுவதற்கு 15 நாட்களுக்குள் ஒரு திட்டத்தை உருவாக்குமாறு தேசிய புலனாய்வு இயக்குனருக்கு அறிவுறுத்தும் ஒரு நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.





அவர் கூறி இருப்பதாவது: முன்னாள் அதிபர் ஜான் கென்னடி, ராபர்ட் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகியும் மர்மங்கள் நீடிக்கிறது. படுகொலை தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement