கெஜ்ரிவாலை கொல்ல சதி: தேர்தல் கமிஷனில் ஆம் ஆத்மி புகார்

17

புதுடில்லி: '' ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை கொல்ல மத்திய அரசும், டில்லி போலீசும் சதி செய்கின்றனர்,'' என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


டில்லியில் பிப்.,5 ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ., ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கெஜ்ரிவால் கார் மீது கல்வீசப்பட்டது. இதற்கு பா.ஜ., மீது அக்கட்சி குற்றம்சாட்டியது. இதனிடையே, கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் போலீசார் பாதுகாப்பு அளித்து வந்தனர். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி இந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு உள்ளது.


இந்நிலையில், டில்லியில் நிருபர்களைச் சந்தித்த டில்லி முதல்வர் அதிஷி, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் கூறியதாவது: கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து உள்ளது. பா.ஜ., தலைமையிலான மத்திய அரசும், டில்லி போலீசாரும் கெஜ்ரிவாலை கொல்ல சதி செய்கின்றனர். கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் போலீசார் பாதுகாப்பு அளிக்க மீண்டும் அனுமதி கொடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பா.ஜ., மற்றும் டில்லி போலீசார் எந்த கருத்தும் கூறவில்லை.

உண்மை

இந்நிலையில், கெஜ்ரிவால் கூறியதாவது: பஞ்சாப் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து விலக்கப்பட்டது முற்றிலும் அரசியல். ஒருவரின் பாதுகாப்பு அரசியலாக்கப்படுவது வருந்தத்தக்கது. பாதுகாப்பு விஷயத்தில் எந்த அரசியலும் செய்யக்கூடாது.டில்லியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் சொன்னது முற்றிலும் உண்மை. நல்ல விஷயத்தை அவர் கூறி உள்ளார். அவருக்கு நான் சொல்ல விரும்புவது, டில்லியின் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியன மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் தான் நாட்டின் உள்துறை அமைச்சர். யோகி ஆதித்யநாத் அவருடன் அமர்ந்து பேசி சட்டம் ஒழுங்கு மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும். ஆனால், எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்குவதிலும், கட்சியை உடைப்பதிலும், அரசுகளை கவிழ்ப்பதிலும் அமித்ஷா மும்முரமாக உள்ளதால் யாரையும் சந்திக்க அவருக்கு நேரம் இல்லை. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Advertisement