கட்சி துவங்கிய உடனே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்; பெயர் சொல்லாமல் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
சென்னை: 'இன்றைக்கு சில கட்சிகளை பார்க்கிறோம். துவங்கிய உடனே, ஆட்சிக்கு வருகிறோம், வருவோம் என்று சொல்லக் கூடிய நிலை, நாட்டில் இருந்து கொண்டு இருக்கிறது' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க., என்பது நேற்று முளைத்த காளான் அல்ல. தி.மு.க., என்பது ஆட்சிக்கு வர வேண்டும், பதவியில் அமர வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, மக்களுக்காக பணியாற்ற வேண்டும். ஏழை எளியவர்களுக்கு தொண்டு ஆற்ற வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது. இதற்கு பிறகு படிப்படியாக வளர்ச்சி அடைந்தோம். 1949ம் ஆண்டு துவங்கி, 1957ம் ஆண்டு தான் தேர்தல் களத்திற்கே வந்தோம்.
ஆனால் இன்றைக்கு சில கட்சிகளை பார்க்கிறோம். துவங்கிய உடனே, ஆட்சிக்கு வருகிறோம், வருவோம் என்று சொல்லக் கூடிய நிலை, நாட்டில் இருந்து கொண்டு இருக்கிறது.
நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வருவோம், நாங்கள் தான் அடுத்த முதல்வர் என்று சிலர் பிதற்றிக் கொண்டு இருக்கிறார்கள். நான் யார், எந்த கட்சி தலைவர் என்று பெயர் சொல்ல விரும்பவில்லை. அதற்கு காரணம் நான் அவர்களுக்கு எல்லாம் அடையாளம் காட்ட தயாராக இல்லை.
இது தான் உண்மை. அவர்களின் பெயரை சொல்லி இந்த மேடைக்கு உரிய அங்கீகாரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை. அந்த கட்சியோட பெயரை சொல்ல விரும்பவில்லை.
கோபம் வருகிறது!
தி.மு.க., என்று சொன்னாலே சிலருக்கு கோபம் வருகிறது. ஆவேசம் வரட்டும், கோபம் வரட்டும். மதத்தை மையமாக கவர்னர் பேசுவதை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறேன். ஆனால் கவர்னரை மாற்ற வேண்டும் என்று சொல்ல மாட்டேன். அவர் இருப்பதால் தான் தி.மு.க., இன்னும் வளர்கிறது.
அடுத்த சட்டசபை கூட்டத்திற்கும் கவர்னர் வர வேண்டும். நாங்கள் கவர்னர் உரையை எடுத்து கொடுப்போம். அதனை அவர் படிக்காமல் செல்ல வேண்டும். மக்கள் அதனை பார்க்க வேண்டும். பிரதமர் மோடி, அமித்ஷா ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து கவர்னரை மாற்றவே வேண்டாம். அவரே கவர்னராக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சாதனை படைப்போம்
நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம். சாதனை படைப்போம் வரலாறு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துவோம் என்று சொன்னதை முதல்வர் நிகழ்த்தி காட்டினார். தமிழகத்தின் அடையாளங்களை கவர்னர் அழிக்க முயற்சி செய்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: தமிழ் உணர்வும், தன்மானமும் கொண்ட கட்சி தி.மு.க., எங்கிருந்து வந்துள்ளீர்கள் என்பது முக்கியமில்லை. எங்கு வரவேண்டுமோ அங்கு வந்து விட்டீர்கள், என்றார்.