அரசின் மானியச்சுமை அதிகரிப்பு: காரணம் என்ன?
புதுடில்லி: நடப்பு 2024-25ம் நிதியாண்டில் அரசின் மானியச்சுமை 4.1-4.2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என பாங்க் ஆப் பரோடா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நடப்பு 2024 -25ம் நிதியாண்டில் உணவு, உரம் மற்றும் பெட்ரோலியம் உள்ளிட்ட முக்கிய பொருட்களுக்கு மானியமாக ரூ.3.8 லட்சம் கோடியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி இருந்தது.
இந்நிலையில் பாங்க் ஆப் பரோடா வங்கி நடத்திய ஆய்வு ஒன்றில் கூறப்பட்டு உள்ளதாவது:
ராபி பருவத்தில் குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு காரணமாக மானியத்திற்கான நிதி 10 சதவீதம் கூடுதலாக செலவாகி உள்ளது. அதேபோல் போக்குவரத்து மற்றும் சேகரித்து வைப்பது ஆகியனவும் மானியத்திற்கான செலவை கூடுதலாக்கி உள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால், இறக்குமதி செலவு அதிகரிக்கிறது. இதனால், உர மானியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட கூடுதலாக 10 சதவீதம் தேவைப்படுகிறது. சில்லரை விலை உயர்வதை தடுக்க மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதனால், ஒட்டுமொத்தமாக, மானியத்திற்கான நிதி தேவை என்பது ரூ.4.1-4.2 லட்சம் கோடியை தாண்டும்.
அதேநேரத்தில் 2025-26 நிதியாண்டில் மானியத்தை மத்திய அரசு முறைப்படுத்தும். இதனால், அந்த நிதியாண்டில் மானியத்திற்கான தேவை 4 லட்சம் கோடியாக குறையும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.