வருண்குமார் - சீமான் மோதல் தொடர்கிறது; ஒருமையில் விமர்சித்து பதிவு
திருச்சி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை ஒருமையில் விமர்சித்து திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண்குமார் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
திருச்சி சரக டி.ஐ.ஜி., ஆக பணியாற்றும் வருண்குமாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் சில ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாட்டில் பேசிய வருண்குமார், நாம் தமிழர் கட்சியினர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறினார். தன்னையும், தன் மனைவி, குழந்தைகளை பற்றி அவதுாறு செய்வதாகவும், படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், வருண்குமாருக்கு எதிராக கடுமையாக பேசி வந்தார். இதனையடுத்து சீமானிடம் ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு திருச்சி நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். இதனை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இவ்வாறு இரு தரப்பினர் இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வந்த நிலையில் வருண்குமார் இன்று பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கொஞ்சநஞ்சம் பேச்சா.... திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால் உழைத்து படித்து முன்னேறியவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்... இவ்வாறு அதில் வருண்குமார் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அந்த பதிவிற்கு நெட்டிசன்கள் வருண்குமாருக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் சீமானுக்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.