ராமதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது ஐகோர்ட்

மதுரை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மீதான வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ள ஐகோர்ட் மதுரை கிளை, அவர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டு உள்ளது.


கடந்த 2004ம் ஆண்டு பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் புகைப்பிடித்தது தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே ஆண்டு ஏப்.,2ம் தேதி ராமதாஸ் மதுரை வந்தார். அவருக்கு ரஜினி ரசிகர்கள் கருப்புக் கொடி காட்டினர். இதனையடுத்து பா.ம.க.,வினருக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ரஜினி ரசிகர்கள் சிலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ராமதாஸ் உட்பட பா.ம.க.,வினர் மீது மதுரை விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐகோர்ட் மதுரை கிளையில் ராமதாஸ் மனு தாக்கல் செய்தார்.


இதனை விசாரித்த ஐகோர்ட், கீழமை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் அவருக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது.

Advertisement