போலீசார் மீது தாக்குதல்: சேலத்தில் 12 பேர் கைது

4

சேலம்: சேலம் அம்மாபேட்டையில், மோசடி புகார் குறித்து விசாரிக்கச் சென்ற பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.


சேலம் மாநகரம், அம்மாபேட்டை, காமராஜர் நகர் காலனி உள்ள பி. எஸ்.கே. சிவகாமி திருமண மண்டபத்தில் இயங்கி வரும் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையில் பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்து வருவது சம்பந்தமாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு புகார்கள் குவிந்தன.

உளவு அமைப்புகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அரசுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அறிக்கை அளித்தனர். அந்த அறிக்கையில், அன்னை தெரசா அறக்கட்டளைக்கு, வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதும், அதனை கணக்கில் காட்டும் வகையில் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதும் தெரியவந்தது.


இந்த அறிக்கையின் பேரில், நேற்று மாலை 4 மணியளவில், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி ஆகியோர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு திருமண மண்டபத்துக்கு விசாரிக்க சென்றது.


அங்கு இருந்தவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததோடு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் செல்போன்களை பிடுங்கி வைத்துக்கொண்டு அவர்களிடம் தகராறு செய்து தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேலம் மாநகர போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் திருமண மண்டபத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன் அங்கு அறக்கட்டளை என்னும் பெயரில் மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலையும், தாக்குதல் நடத்தியவர்களையும் குண்டுகட்டாக போலீசார் தூக்கி வந்தனர்.

இந்த சம்பவ குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஏட்டு கலைச்செல்வி (42), அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

அதன்பேரில், தாதம்பட்டியைச் சேர்ந்த, மைக்கேல்,45, மரவனேரி மோகன்ராஜ் 37,
விஜய் அமிர்தராஜ்,45, பொன்னம்மாப் பேட்டை விஜய் அமிர்தராஜ், 45, சின்ன திருப்பதி சேர்ந்த அருள்ராஜ் ,47, அதே பகுதியைச் சேர்ந்த பியூலா,45, அம்மாபேட்டையை சேர்ந்த கோமதி,35, மறவன் ஏரியைச் சேர்ந்த எம். ந. கோமி, 30, பெரிய வீராணத்தைச் சேர்ந்த தேன்மொழி,34, வேலூர் மாவட்டம் சத்துவாஞ்சேரியைச் சேர்ந்த தேவிகா,49, அம்மாபேட்டையை சேர்ந்த அம்மு குட்டி,43, பொன்னம்மாபேட்டியைச் சேர்ந்த மதலை மேரி,37, பெரிய வீராணத்தைச் சேர்ந் அமுதா,47, ஆகிய 12 பேர் மீது 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து கைது செய்தனர்.

Advertisement