காயத்தால் விலகினார் ஜோகோவிச் * பைனலில் ஜிவரேவ்-சின்னர் பலப்பரீட்சை
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில், காயத்தால் விலகினார் ஜோகோவிச். பைனலில் சின்னர்-ஜிவரேவ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் அரையிறுதியில் 'நம்பர்-7' வீரர் செர்பியாவின் ஜோகோவிச், 'நம்பர்-2' வீரர், ஜெர்மனியின் ஜிவரேவ் மோதினர். இத்தொடரில் 10 கோப்பை வென்ற ஜோகோவிச், தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் திணறினார்.
இருப்பினும் முதல் செட் 6-6 என செல்ல, 'டைபிரேக்கர்' நடந்தது. இதில் ஜோகோவிச் 6-7 என செட்டை இழந்தார். தொடர்ந்து விளையாட முடியாததால், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 25 வது பட்டம் வெல்லும் திட்டம் கைகூடவில்லை. ஜிவரேவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, முதன் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பைனலுக்குள் நுழைந்தார்.
சின்னர் கலக்கல்
மற்றொரு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' வீரர், நடப்பு சாம்பியன் இத்தாலியின் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டனை ('நம்பர்-21') எதிர்கொண்டார். 'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை சின்னர் (7-6) வென்றார். அடுத்த இரு செட்டையும் இவர், எளிதாக (6-2, 6-2) வசப்படுத்தினார்.
முடிவில் சின்னர், 7-6, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார்.
இது கடைசியா...
ஜோகோவிச் கூறுகையில்,'' இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால், காலிறுதிக்குப் பின் பயிற்சியில் ஈடுபடவில்லை. காயம் மிகவும் மோசமானது. முதல் செட்டை வென்றிருந்தாலும், தொடர்ந்து விளையாடுவது சிரமம் தான். உடற்தகுதியுடன் இருந்தால் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பேன்,'' என்றார்.
ரசிகர்கள் மோசம்
ஜோகோவிச், மைதானத்தை விட்டு வெளியேறிய போது, ரசிகர்கள் அவரை கேலி செய்யும் வகையில் சப்தம் எழுப்பினர். இதுகுறித்து ஜிவரேவ் கூறுகையில்,'' காயத்தால் ஒருவர் வெளியே செல்லும் போது இப்படிச் செய்யக் கூடாது,'' என்றார்.