சீமான் போகும் பாதை சரியில்லை சொல்கிறார் திருமாவளவன்
சென்னை:''டங்ஸ்டன் வெற்றிக்கு யார் உரிமை கோருவது என்பதல்ல பிரச்னை. அப்பகுதி மக்களின் வலுவான கோரிக்கை அது,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது கைவிடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு கொடுத்த அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி.
இந்த வெற்றிக்கு யார் உரிமை கோருவது என்பது அல்ல பிரச்னை. அப்பகுதி மக்களின் வலுவான கோரிக்கை அது. அதற்காக, சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவர்னர் ரவி, தமிழக மக்களின் உணர்வுகளையும், கலாசாரத்தையும் மதிப்பதில்லை. அவர் உள்வாங்கிய கருத்திற்கு ஏற்ப செயல்படுகிறார். சட்டசபையை அவமதித்து வெளியேறினார். அதனால், அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்.
பரந்துார் மக்கள், 'விவசாயத்தை அழிக்கக்கூடாது; எங்களை அப்புறப்படுத்தக் கூடாது' என்கின்றனர். குறிப்பிட்ட நிலத்தைக் காட்டி, 'அங்கே விமான நிலையம் அமைக்கலாம்' என்கின்றனர். அதை நாங்கள் ஆதரிக்கிறோம்.
சீமான், சனாதன கும்பலின் திட்டத்திற்காக செயல்படுகிறார். அவர் போகிற பாதை அவருக்கு பயன்படாது; சனாதன சக்திகளுக்கு தான் பயன்படும். இவர் தமிழ்த்தேசியம் பற்றி பேசலாம். ஆனால், ஈ.வெ.ரா., பற்றி தனிமனித தாக்குதல் நடத்தக்கூடாது.
பிரபாகரனுடன் தமிழக அரசியல் பேசியுள்ளேன். அவர் ஒருபோதும் யாரையும் தவறாகப் பேசியதில்லை; ஈ.வெ.ரா.,வையும் பேசியதில்லை.
இந்திய அரசின் துணை இல்லாமல், ஈழத்தை மீட்டெடுக்க முடியாது என்ற தெளிவு, பிரபாகரனிடம் இருந்தது. தற்போது சீமான் பேசி வருவது, பிரபாகரன் கொள்கைக்கு எதிரானது.
இவ்வாறு அவர் கூறினார்.