திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு தான் சொந்தம்: அர்ஜூன் சம்பத்
திண்டுக்கல்: ''திருப்பரங்குன்றம் முழுவதும் முருகப்பெருமானுக்கு தான் சொந்தம்'' என, ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: தொடர்ச்சியாக ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பல இடங்களில் தாக்கப்படுகிறார்கள். போராட அனுமதி கேட்டாலும் போலீசார் மறுக்கின்றனர். தி.மு.க., வி.சி.க.,விற்கு மட்டும் எந்த நிகழ்ச்சிகள் நடத்தினாலும் அனுமதி கொடுக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிக்கும் போராட தடை விதித்திருப்பதால் அவர்களும் தற்போது எதிர்க்கின்றனர். அ.தி.மு.க.,ஆட்சி காலத்தில் 30 ஆயிரத்திற்கும் மேல் போராட்டங்கள் நடத்த அனுமதி கொடுத்துள்ளனர். ஆனால் இப்போது அப்படி அல்ல. விஜய்யை பரந்துார் ஊருக்குள் செல்லவே அனுமதிக்கவில்லை. சீமான் வீடு முற்றுகை அநாகரீகமான போராட்டங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கிறார்கள். நீதிமன்றங்கள் இந்த விவகாரங்களில் தலையிட வேண்டும். பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு
தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கை வர வேண்டும். மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நடக்க உள்ளது. கர்நாடகா, ஆந்திராவில் ஹிந்தி படிப்பதால் அவர்கள் மொழி அழிந்து விட்டதா? நவோதயா கல்வி கூடங்கள் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும்.
திருப்பரங்குன்றம் முழுவதும் முருகப்பெருமானுக்கு தான் சொந்தம். சுல்தான் ஆட்சியில் அடக்கம் செய்ததை வைத்து கொண்டு எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகள் மத கலவரத்தை துாண்டும் வகையில் செயல்படுகின்றனர். அமைச்சர் சேகர்பாபு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கருத்து தெரிவித்திருக்க வேண்டும். தமிழகத்தில் பசுமாட்டையும், அந்தணர்களையும் பாதுகாக்க அரண்போல் நிற்போம். தி.மு.க.,வில் இருக்கும் ஹிந்துக்கள் யோசிக்க வேண்டும். இரும்பு காலத்திற்கு முன்பே எங்கள் முருகப்பெருமான் வந்து விட்டார். வள்ளலாரையும், வள்ளுவரையும் தி.மு.க., ஆக்கிரமிக்க நினைக்கிறது. பிப்.6,7,8 தேதிகளில் கும்பமேளாவிற்கு ஹிந்து மக்கள் கட்சி சார்பில் செல்ல இருக்கிறோம். திண்டுக்கல் மலைக்கோட்டையில் வழிபாடு நடத்த தொல்லியல் துறை அனுமதி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.