மக்கள் மீது, நாளுக்கு நாள் வரிச்சுமையை அதிகரித்து வரும் தி.மு.க., முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு


மக்கள் மீது, நாளுக்கு நாள் வரிச்சுமையை அதிகரித்து வரும் தி.மு.க., முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு


கரூர், :''தமிழக மக்கள் மீது, நாளுக்கு நாள் வரிச் சுமையை அதிகரித்து வரும், தி.மு.க., ஆட்சியை, அடுத்த, 12 அமாவாசைக்கு பிறகு, வீட்டுக்கு அனுப்ப தயாராக இருக்க வேண்டும்,'' என, முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
அ.தி.மு.க., நிறுவன தலைவரும், மறைந்த முதல்வருமான எம்.ஜி.ஆரின், 108 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், நேற்று இரவு கரூர் வேலுசாமி
புரத்தில் நடந்தது. அதில், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:
கடந்த, 2011 முதல், 2021 வரை, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், கரூர் மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அனைத்தையும், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்தது போல, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசி வருகிறார்.
கரூர் மாவட்டத்தில், மீண்டும் பொதுமக்களிடம் மனு வாங்கும் பணியை, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கியுள்ளார். அவர், அமைச்சர் ஆன புதிதில், கரூரில் பொதுமக்களிடம் வாங்கிய கோரிக்கை மனுக்கள், மூட்டைகளாக கட்டி, கோதுார் குப்பை காட்டில் வீசப்பட்டுள்ளது. அதை அ.தி.மு.க., நிர்வாகிகள் கொண்டு வந்து விட்டனர். இதுதான் தி.மு.க., ஆட்சியின் அவலம். மனுக்களை வாங்க, தான் ஒருவர் போதாது என, அமைச்சர் செந்தில் பாலாஜி, பக்கத்து மாவட்ட அமைச்சரையும் கூட்டி வந்து, கரூரில் மனு வாங்குவதாக, பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்.
தமிழக மக்கள் மீது, நாளுக்கு நாள் வரிச் சுமையை அதிகரித்து வரும் தி.மு.க., ஆட்சியை வரும், 12 அமாவாசைக்கு பிறகு, வீட்டுக்கு அனுப்ப தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சின்னசாமி, சிவபதி, தலைமை நிலைய பேச்சாளர் நிர்மலா, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெ., பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் கமலகண்ணன் உள்பட, நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement