மானாமதுரையில் பூண்டு ரூ.250க்கு விற்பனை
மானாமதுரை : மானாமதுரையில் கடந்த சில மாதங்களாக ரூ.500க்கும் மேல் விற்கப்பட்ட வெள்ளைப்பூண்டு தற்போது ஒரு கிலோ ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெள்ளைப் பூண்டு கிலோ ரூபாய் 500 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வெள்ளைப்பூண்டின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
மானாமதுரையில் தேனியில் இருந்து வாகனங்களில் மொத்தமாக வெள்ளைப்பூண்டை கொண்டு வரும் வியாபாரிகள் மலைப்பூண்டு என்று அழைக்கப்படும் வெள்ளைப்பூண்டை ஒரு கிலோ ரூ.250க்கு விற்பனை செய்ததால் ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
தேனியைச் சேர்ந்த வெள்ளைப்பூண்டு வியாபாரி கோகுல் கூறியதாவது:
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் வெள்ளைப் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோன்று ஹிமாச்சல் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களிலும் அதிகளவில் வெள்ளைப்பூண்டு விளைவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக வெள்ளைப்பூண்டு விலை உயர்ந்திருந்த நிலையில் தற்போது விளைச்சல் அதிகமானதை தொடர்ந்து வெள்ளை பூண்டு விலை தற்போது படிப்படியாக குறைந்து ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300க்கு விற்பனை செய்து வருகிறோம் என்றார்.