10 ரூபாய் டீ, 20 ரூபாய் சமோசா திட்டம் தமிழக 'ஏர்போர்ட்'களில் அமலுக்கு வருமா?

28

சென்னை: 'தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், மத்திய அரசின், 'உடான் யாத்ரி கபே' என்ற, குறைந்த விலை உணவகத்தை துவக்க முன்வர வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள், உலகத் தரத்தில் இயங்குகின்றன. பயணியர் தேவைக்கேற்ப, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இங்கு உணவகம் நடத்த, ஆணையத்திற்கு விமான நிலையங்கள் அதிக தொகையை செலுத்தி ஒப்பந்தம் எடுக்க வேண்டும். இதனால், உணவகங்களில் பொருட்கள் விலை மிக அதிகம்.

முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய வருவோர், விமான நிலையங்களில் உள்ள உணவகங்களின் விலை பட்டியலை பார்த்தால் பயந்து விடுவர்.

அனுமதி

தண்ணீர் பாட்டில், 125 ரூபாய், இட்லி, 250, பிரியாணி, 450 ரூபாய் என, விலை இருக்கும். மத்திய சிவில் விமான பாதுகாப்பு பணியகம், 100 மி.லி, அளவு குடிநீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கிறது.

இதனால், பயணியர் அதிக விலை கொடுத்து, தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றி, பயணியருக்கு குறைந்த விலையில், குடிநீர், டீ, காபி உள்ளிட்டவை கிடைக்கும் வகையில், மத்திய அரசு, 'உடான் யாத்ரி கபே' எனப்படும், விலை குறைவாக பொருட்கள் விற்கும் உணவகங்களை திறக்க முடிவு செய்தது.

முதற்கட்டமாக, கோல்கட்டா விமான நிலையத்தில் இதுபோன்ற உணவகம் கடந்த மாதம் துவக்கப்பட்டது. அதேபோன்ற உணவகத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் துவக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, விமான பயணியர் சிலர் கூறியதாவது:

கல்வி, வேலை, மருத்துவம், சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக, விமான போக்குவரத்தை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.

வழக்கம்

விமான நிலையத்தில், 'போர்டிங்' பாஸ் வாங்கி விட்டு, விமானத்திற்காக காத்திருக்கும் நேரங்களில், உணவு பண்டங்களை சாப்பிடுவது வழக்கம். தற்போது, எந்த விமான நிலையமாக இருந்தாலும், ஒரு டீ, காபிக்கு குறைந்தது, 150 ரூபாய் செலவிட வேண்டும்.

தனி நபராக பயணிக்கும் போது, இந்த விலையானது யாரையும் பாதிப்பதில்லை. அதுவே, குடும்பத்துடன் செல்லும் போது, பெரும் சிக்கலாக உள்ளது. நான்கு பேருக்கு தண்ணீர் பாட்டில் வாங்கினாலே, 500 ரூபாய் செலவாகும்.

இட்லி, தோசை உள்ளிட்ட உணவு வகைகளை திருப்தியாக சாப்பிடுவதற்கு, குறைந்தது, 500 முதல் 1,000 ரூபாய் செலவிட வேண்டும். விமான டிக்கெட் விலை தான் ஆயிரக்கணக்கில் உள்ளது என்றால், உணவு வகைகளின் விலையும் பல மடங்கு உள்ளது.

எனவே, மத்திய அரசின், 'உடான் யாத்ரி கபே' திட்டத்தை தமிழக விமான நிலையங்களில் செயல்படுத்தினால், பயணியருக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement