ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் மாதாந்திர மின் கணக்கெடுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

1

சென்னை:''மாதந்தோறும் மின் நுகர்வு கணக்கிடும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில், அது நடைமுறைக்கு வரும்,'' என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கோடை நெருங்குவதால், மின்சார வினியோக நிலவரம் குறித்து, மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று அமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினார். வாரிய தலைவர் நந்தகுமார், இயக்குனர்கள், மேல்நிலை பொறியாளர்கள் பங்கேற்றனர்.

பின், அமைச்சர் பேட்டி அளித்தார்.

''கடந்த ஆண்டு கோடையில் மின் தேவை 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இந்தாண்டு 22,000 மெகா வாட்டாக உயரும் என கணக்கிட்டுள்ளோம். அதை, தடையின்றி பூர்த்தி செய்வோம்,” என்றார்.

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மின்சார பயன்பாடு கணக்கிடுவதால், அதிக கட்டணம் செலுத்த நேர்கிறது என்று நீண்ட காலமாக மக்கள் முறையிடுகின்றனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும் மின் நுகர்வு கணக்கிடும் திட்டம் அமல்படுத்தப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை செயல்படுத்தவில்லை.

உத்தரவு



இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, எப்போதும் சொல்லும் பதிலையே மின்துறை அமைச்சர் தெரிவித்தார். “மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுப்பை, விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் அது அமலுக்கு வரும்,” என்றார்.

விரைவில் என்றால் எப்போது?

''ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும், மாதாந்திர கணக்கெடுப்பு நடைமுறைக்கு வரும்!”

ஸ்மார்ட் மீட்டர் இன்னும் ஏன் பொருத்தவில்லை?

“ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. நாம் எதிர்பார்த்த குறைந்த விலைப்புள்ளி கிடைக்கவில்லை. எனவே, அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது; புதிய டெண்டர் கோரப்படும்,” என அமைச்சர் கூறினார்.

மீண்டும் உறுதி



ஆக, இந்த ஆட்சிக் காலம் முடியும் வரையில் மாதாந்திர மின் கணக்கெடுப்பு திட்டம் அமலுக்கு வராது; அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதிகளில் சேர்க்கப்படும் என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

''வோல்டேஜ் பிரச்னை ஏற்படும் இடங்களில் 5,407 டிரான்ஸ்பாமர்கள் அமைத்துள்ளோம்; மேலும் 1,129 நிறுவப்படும். 2,000 மெகா வாட் சூரியசக்தி மின்சாரத்தை சேமிக்கும் 'பேட்டரி ஸ்டோரேஜ்' அமைக்கப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement