குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து டிராக்டரை சிறை பிடித்த விவசாயிகள்
குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து டிராக்டரை சிறை பிடித்த விவசாயிகள்
இடைப்பாடி, :இடைப்பாடி அருகே, அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட குறுக்குப்பாறையூரில், பேரூராட்சியினர் குப்பை கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிராக்டரை விவசாயிகள் நேற்று சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசிராமணி பேரூராட்சி, குறுக்குப்பாறையூரில், 100க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள், பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசிராமணி பேரூராட்சி நிர்வாகம், பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். குப்பை கழிவுகளை கொட்டுவதால், சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குப்பை கொட்டும் இடம் உயரமான பாறைகள் கொண்ட இடமாக இருப்பதால், மழை காலங்களில் குப்பை கழிவுகள் மழை நீரில் கலந்து சுற்றுப்பகுதியில் இருக்கும் நீர் நிலைகளில் கலந்து, குடிநீரும் விவசாயமும் பாதிக்கப்படுகிறது.
மேலும், கழிவு நீர் ஏரிகளிலும் கலந்து வருகின்றன. பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. எனவே, குப்பைகளை பொதுமக்கள் வசிக்காத பகுதியில் கொட்ட வேண்டும் என்பதை
வலியுறுத்தி, நேற்று குப்பை கொண்டு வந்த டிராக்டரை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, சங்ககிரி தாலுகா தலைவர் ராஜேந்திரன், குறுக்குப்பாறையூர் கிராம மக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.