மூதாட்டியிடம் 7 பவுன் தங்கசங்கிலி திருடிய வாலிபர் கைது
மூதாட்டியிடம் 7 பவுன் தங்கசங்கிலி திருடிய வாலிபர் கைது
வீரபாண்டி, :முறுக்கு விற்கும் மூதாட்டியிடம், 7 பவுன் தங்க சங்கிலியை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆட்டையாம்பட்டி, சேலம் பிரதான சாலையை சேர்ந்த கந்தசாமி மனைவி பழனியம்மாள். 80. இவரது கணவர் இறந்த நிலையில், வீட்டின் முன் முறுக்கு சுட்டு விற்பனை செய்து வருகிறார். கடந்த, 21 இரவு படுக்க செல்லும் முன் கழுத்தில் இருந்த, 7 பவுன் தங்க சங்கிலியை கழற்றி பணப்பெட்டியில் வைத்து விட்டு துாங்கியுள்ளார். மறுநாள் காலை பார்த்த போது தங்க சங்கிலியை காணவில்லை.
இது குறித்து பழனியம்மாள் அளித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து திருடனை தேடி வந்தனர். நேற்று அரியானுார்-ஆட்டையாம்பட்டி பிரதான சாலை, பைரோஜி பஸ் ஸ்டாப் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்குரிய வகையில் வந்த வாலிபரை பிடித்து ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்தனர்.
பிடிபட்டவர் பிச்சம்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் சுரேஷ்குமார். 23, என்பதும், இவர் சமையல் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. கடன் சுமையால் பழனியம்மாளின் தங்க சங்கிலியை திருடியதை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் தங்க சங்கிலியை பறிமுதல் செய்து, சுரேஷ்குமாரை சிறையில் அடைத்தனர்.