ரூ.58 லட்சம் ஒதுக்கீட்டில் நான்கு வகுப்பறைகள் திறப்பு
ரூ.58 லட்சம் ஒதுக்கீட்டில் நான்கு வகுப்பறைகள் திறப்பு
சேலம், : சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், புதிதாக நான்கு வகுப்பறை கட்டடங்களை, அமைச்சர் ராஜேந்திரன் திறந்து வைத்து பேசியதாவது:
சிறப்பான கல்வி பெறும் வகையில், பள்ளி செல்லா பிள்ளைகளை கண்டறிய செயலி, உயர்தொழில் நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்றுநோக்கு செயலி, கருணாநிதி மொழி பெயர்ப்பு திட்டம், இளந்தளிர் இலக்கிய திட்டம், மாதிரி பள்ளிகள், தகைசால் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறை போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
கடந்த, 1969ல், அப்போதைய முதல்வர் கருணாநிதி, இப்பள்ளி கட்டடத்தை நேரில் வந்து திறந்து வைத்துள்ளார். தரமான வகுப்பறை கட்டடம், விளையாட்டு மைதானம், சுகாதார வளாகம் சிறப்பாக செயல்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக இப்பள்ளியில் சேலம் ரவுண்ட் டேபிள் 28 மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக, 58 லட்ச ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் திரையுடன் கட்டப்பட்ட நான்கு வகுப்பறை, சுகாதார வளாகம், பள்ளி மேம்பாடு பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நபார்டு திட்டத்தின் மூலம் கூடுதலாக, ஆறு வகுப்பறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திடும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.
கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.