வருமானம் இல்லாமலும் மனநிறைவுடன்பணிபுரிகிறேன்!
மார்கழி மாதம் முழுதும், வீட்டு வாசலில் ரங்கோலி கோலங்கள் போட்டு அசத்திய, புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கடேச பெருமாள்:
என் குடும்பம், எளிய பின்னணி கொண்டது. ஐந்து குழந்தைகளில் ஒரே மகனாக பிறந்த எனக்கு, 14 வயது முதல் கோலத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், என் கோல ஆசை, ஆரம்பத்தில் பலராலும் கேலியாகத்தான் பார்க்கப்பட்டது.
மார்கழி மாத அதிகாலையில், மூத்த சகோதரியுடன் வாசலில் கோலம் போடுவேன். அப்போது, யாராவது வந்தால் வீட்டினுள் ஓடி ஒளிந்து கொள்வேன். ஓவிய ஆசிரியரும், நண்பரும் கொடுத்த உற்சாகத்தில் தான், நாளடைவில் உற்சாகமாக செயல்படத் துவங்கினேன். 'டெரகோட்டா' எனப்படும் களிமண் பாண்ட படைப்புகள் செய்வதுதான் என் தொழில்.
'ரங்கோலி ஆர்ட் பவுண்டேஷன், கோலங்கள் ஜாலங்கள்' உள்ளிட்ட சமூக ஊடக குழுக்களில் என்னை இணைத்துக் கொண்டேன். அதன் வாயிலாக கிடைக்கும் வேலைகள் மட்டுமல்லாமல், கோவில்களில் கோலங்கள் போடுவதிலும் ஈடுபட்டேன்.புள்ளிக் கோலங்கள், வர்ணம் தீட்டுதல் என்றுதான் ஆரம்பத்தில் வரைய ஆரம்பித்தேன்.
உள்ளூர் கோலப்போட்டிகளில், புள்ளி வைத்து கோலமிடுவது கட்டாயம் என்பதால், திருவள்ளுவர் மற்றும் கடவுள் உருவங்களைக்கூட புள்ளி வைத்து போட்டு அசத்தியுள்ளேன்.
ராமானுஜர் உருவத்தை, சென்னை ஐ.ஐ.டி.,யில் கோலமாக வரைந்துள்ளேன். மற்றொரு சமயத்தில் ஐ.ஐ.டி.,யில் நடந்த கோலம் வரைதல் நிகழ்வில், காஞ்சி மகா பெரியவரின் உருவத்தை வரைந்தேன்.
அப்போது, அங்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணி, ஓவியர் ஷியாம் ஆகியோர் என் கலையை மிகவும் வியந்து பாராட்டினர்.
கடந்த 2023ல், 'நேஷனல் அகாடமி'யால் ரவிவர்மா விருது, எனக்கு வழங்கப்பட்டது. அவர்களின் மாநில அளவிலான போட்டியிலும் சிறந்த கோலத்திற்கான விருது பெற்றிருக்கிறேன். இப்படி என் ஆர்வத்திற்கும், உழைப்பிற்கும் உரிய அங்கீகாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் மாதம் ஒருமுறை மாணவர்களுக்கு ரங்கோலி, களிமண் பாண்ட படைப்புகளை உருவாக்க கற்றுத் தருகிறேன்.
ஆனால், இந்த தொழிலில் போதிய வருமானம் கிடைப்பதில்லை; இருப்பினும் மனநிறைவுடன்
பயணிக்கிறேன்.களிமண் பாண்ட கலையை கற்றுத்தர தனியாக நிறுவனம் ஒன்றை துவங்கும் எண்ணமும் இருக்கிறது. என் அனைத்து முயற்சிகளுக்கும் குடும்பத்தினர் எப்போதும் உறுதுணையாக இருக்கின்றனர்.