போரை கை விடுங்கள்; மீறினால் அதிக வரி, பொருளாதார தடை விதிப்போம்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: 'உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விரும்பவில்லை என்றால் அதிக வரி மற்றும் பெரிய பொருளாதார தடைகளை விதிப்போம்' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதும், 'நான் அதிபராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்' என டொனால்டு டிரம்ப் சபதம் செய்தார். அவர் அதிபராக பதவியேற்று 5 நாட்கள் ஆகி உள்ளது. இந்நிலையில், போர் தொடர்பாக செய்தி சேனலுக்கு டிரம்ப் அளித்த பேட்டி: போராட வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முடிவு செய்துள்ளார். அவர் ரஷ்ய படைகளை எதிர்த்து இருக்க கூடாது. ஆனால் ஜெலென்ஸ்கி எதிர்த்து போராடினார்.
அவர் மிகப் பெரியவர், மிகவும் சக்திவாய்ந்தவர். போரைத் தவிர்ப்பதற்காக ரஷ்யா அதிபர் புடினுடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். உக்ரைன்-ரஷ்யா மோதல்கள் பேரழிவு தரும் இழப்புகளை விளைவித்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர்.
உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விரும்பவில்லை என்றால் அதிக வரி மற்றும் பெரிய பொருளாதார தடைகளை விதிப்போம். ஜோ பைடன் உக்ரைனுக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கினார். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
'ஒரு நாளுக்குள் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் கூறியுள்ள நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்க்கும் உக்ரைனின் முடிவு தவறானது' என தற்போது கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.