சென்னைவாசிகள் கவனத்துக்கு! இந்தியா-இங்கி. டி20 போட்டிக்காக போக்குவரத்து மாற்றம்!

சென்னை: இந்தியா, இங்கிலாந்து டி 20 கிரிக்கெட் போட்டி காரணமாக தலைநகர் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.



இந்தியா வந்துள்ள இங்கிலாந்து டி 20 கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வென்று தொடரில் முன்னிலையில் உள்ளது.


இரு அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி இன்று (ஜன.25) சென்னையில் தொடங்குகிறது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடக்கிறது.


போட்டியைத் தொடர்ந்து சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.


அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;


விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.


பெல்ஸ் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் சாலை செல்ல வாகன ஓட்டிகளுக்கு அனுமதி உண்டு.


இரவு 10 மணிக்கு பின்னர் நேப்பியர் பாலத்தில் இருந்து கண்ணகி சிலை வரையான சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


அண்ணா சாலையில் இருந்து வாகனங்கள் அனைத்தும், கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மைதானம், எம்.ஆர்.டி.எஸ்., சேப்பாக்கம், பொதுப்பணித்துறை மைதானம், சுவாமி சிவானந்தம் சாலையில் நிறுத்திக் கொள்ளலாம்.

Advertisement