ரூ.50 லட்சத்தில் சமுதாய கூடம் நாய்க்கன்குப்பத்தில் அடிக்கல்
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியம் நாய்க்கன்குப்பம் கிராமத்தை சுற்றி சின்னிவாக்கம், புத்தாகரம், மருதம், வடுவர்பட்டு, ஓடந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களை சேர்ந்தோர் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம், வளைகாப்பு, பிறந்த நாள் விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு, வாலாஜாபாதில் உள்ள தனியார் மண்டபங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தனியார் திருமண மண்டபங்களில், குறைந்தபட்ச வாடகையாக 25,000 ரூபாயில் இருந்து, 1 லட்சம் ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனால், ஏழை, எளிய மக்களின் குடும்ப நிகழ்ச்சிகளை தனியார் மண்டபங்களில் நடத்த பெரும் செலவு செய்ய வேண்டி உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியோர் வாடகை கொடுத்து, மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்துவது பெரும் சவாலாகவே உள்ளது. இதனால், நாய்க்கன்குப்பம் கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையேற்று, அப்பகுதியில் புதிதாக சமுதாயக்கூடம் கட்ட காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 40 லட்சம் ரூபாய் மற்றும் பொது நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாய் என, 50 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, கட்டட பணியை துவக்கி வைத்தனர். வாலாஜாபாத் ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், து.தலைவர் சேகர் மற்றும் ஊராட்சி தலைவர் அன்னக்கிளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.