கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து நிலம் மீட்க காத்திருப்பு போராட்டம்
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து நிலம் மீட்க காத்திருப்பு போராட்டம்
கிருஷ்ணராயபுரம்,:கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து கிழக்கு காலனி பகுதியில், நீதிமன்ற தீர்ப்பின்படி மீட்டெடுத்த அரசு புறம்போக்கு நிலத்தில், கம்பி வேலியை உடைத்து தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி நேற்று, அப்பகுதி மக்கள் கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபாகர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட அந்த இடம் தற்போது டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் உள்ளது. அந்த இடத்தில் வேறு நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. மேலும் அந்த இடத்தில், புதிதாக கட்டடம் கட்டுவதற்கான பணிகளுக்கு பூமி பூஜை விரைவில் தொடங்கப்படுகிறது. நிலம் அரசுக்கு சொந்தமானது. முறையாக மக்களுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றார்.
தாசில்தார் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ருக்குமணி உடனிருந்தார்.