கரூரில் அரசு பள்ளி மாணவன் கடத்தல் ஒருவர் கைது; 3 பெண்கள் தலைமறைவு
கரூரில் அரசு பள்ளி மாணவன் கடத்தல் ஒருவர் கைது; 3 பெண்கள் தலைமறைவு
கரூர், :கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, அரசு பள்ளி மாணவனை கடத்தி சென்ற, மூன்று பெண்கள் உள்பட, நான்கு பேர் மீது போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர்.கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 40; இவர், உப்பிடமங்கலம் பகுதியில், சீட்டு கம்பெனி நடத்தியுள்ளார். அதில், டெபாசிட் செய்தவர்களுக்கு சுரேஷ் குறிப்பிட்ட காலத்தில், பணத்தை திருப்பி தரவில்லை.
மேலும் சுரேஷ், மனைவி பரிமளாவுடன் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த தம்பதியின் மகன் யுவராஜ், 15, அரவக்குறிச்சியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, ஜெகதாபி அரசு மேல்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த, 22 இரவு, பள்ளிக்கு சென்று விட்டு, அரவக்குறிச்சியில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்ல, யுவராஜ் கரூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, சுரேஷிடம் பணம் கட்டி ஏமாந்த பிரபாகரன், 27; கருப்பாயி, 28; கனிமொழி, 25; மகாலட்சுமி, 28; ஆகிய, நான்கு பேரும், கத்தியை காட்டி மிரட்டி யுவராஜை கடத்தி கொண்டு, உப்பிட மங்கலத்துக்கு சென்றனர்.
பிறகு, பணம் கொடுத்தால்தான் மகன் யுவராஜை விடுவோம் என, பிரபாகரன் உள்பட, நான்கு பேரும் சுரேைஷ, மொபைல் போன் மூலம் மிரட்டினர்.
இதுகுறித்து, சுரேஷ் அளித்த புகாரின்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி மாணவன் யுவராஜை மீட்டனர். மேலும், மாணவனை கடத்தி சென்றதாக பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய, மூன்று பெண்கள் மீதும், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.