தச்சூர் - சித்துார் ஆறுவழி சாலை பணி லாரியில் பயணிக்கும் கான்கிரீட் பாலம்
பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் இருந்து, ஆந்திர மாநிலம், சித்துார் வரை ஆறுவழிச் சாலை பணி நடந்து வருகிறது. இந்த சாலை வழியாக எண்ணுார் துறைமுகத்தில் இருந்து கர்நாடக மாநிலம், பெங்களூரு வரை விரைவு சாலை அமைய உள்ளது.
இந்த சாலை, பள்ளிப்பட்டு அடுத்த, குமாரராஜபேட்டை அருகே, சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையை கடக்கிறது. இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்திற்கு தடையின்றி மேம்பாலம் அமைப்பதற்காக, ரெடிமேட் கான்கிரீட் பாலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பள்ளிப்பட்டு நீதிமன்றம் எதிரே அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்த இடத்தில் இந்த பிரமாண்ட கான்கிரீட் பாலம் உருவாக்கப்படுகிறது.
பல்வேறு பாகங்களாக தயாரிக்கப்படும் இந்த கான்கிரீட் துாண்கள், லாரிகளில் குமாரராஜபேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. விரைவில் பாலம் அமைக்கும் பணி நிறைவு பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.