கிடப்பில் உள்ள சாலைப்பணிக்கு விடியல் வருமா; 'ரோடு ஷோ'வில் முதல்வரிடம் மனு கொடுத்த மக்கள்
இவ்வொன்றியத்தில் மேலவண்ணாரிருப்பில் இருந்து உரத்துப்பட்டு செல்லும் 5 கி.மீ., தார்ச்சாலை 1999 ஆம் ஆண்டு போடப்பட்டது. அதற்கு பிறகு சாலை பழுதடைந்த நிலையில் 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. மீண்டும் புதிதாக சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கியது.
3 கி.மீ., தார் சாலை போடப்பட்ட நிலையில், இடையில் மூன்று இடங்களில் 2 கி.மீ., தூரத்திற்கு வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளதாக வனத்துறையினர் அனுமதிமறுத்தனர். இதனால் கிராவல் கொட்டப்பட்டு கற்கள் பரப்பிய நிலையில் 10 ஆண்டுகளுக்கும்மேலாக சாலை அப்படியே உள்ளது. இதில் நடந்து கூட செல்ல முடியாமல் சுற்றுவட்டார கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதே போல் மாவட்டத்தில் பல்வேறு சாலைகள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து முறையான அனுமதி பெற்று போடப்பட்டுள்ள நிலையில், இந்த சாலை மட்டும் பல்வேறு அரசியல் காரணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் புலம்புகின்றனர்.
பித்தரைச்செல்வம், சமூக ஆர்வலர் மேலவண்ணாரிருப்பு: 25 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை பழுதடைந்துள்ள நிலையில் 10 ஆண்டுகளாக சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் இப்பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ், மினி பஸ் வருவதில்லை. ஆம்புலன்சுகளும் கிராமத்திற்குள் வர முடிவதில்லை.
கர்ப்பிணிகள், நோயாளிகளை கட்டிலில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. சைக்கிளிலும் செல்ல முடியாமல் மாணவர்கள்பள்ளிக்கு பல கி.மீ. துாரம் நடந்தே செல்கின்றனர். சுற்றுவட்டார கிராமத்தினர் சார்பாக சிவகங்கை வந்திருந்த முதல்வரிடம் ரோடு ஷோவின் போது நேரிலேயே மனு அளித்தேன். முதல்வரும் மனுவை பெற்றுகொண்டார். உறுதியாக விடிவுகாலம் பிறக்கும் என கிராம மக்களும் நம்பி இருக்கிறோம்.
மாவட்ட அதிகாரிகளும் 10 கிராம மக்களின் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.